×

நாடாளுமன்றத்தில் வன்முறை தூண்டிய விவகாரம்; அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட தடை: தகுதி நீக்கம் செய்து நீதிமன்றம் தீர்ப்பு

வாஷிங்டன்: நாடாளுமன்றத்தில் வன்முறையை தூண்டியதால் டொனால்ட் டிரம்ப், அடுத்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்து கொலராடோ உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் அதிபராக கடந்த 2016 முதல் 2020 வரை பதவி வகித்த டொனால்ட் டிரம்ப், 2020ம் ஆண்டு இறுதியில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார். இத்தேர்தலில் வெற்றி பெற்ற புதிய அதிபர் ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, 2021 ஜனவரி 6ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்தது. அப்போது, திடீரென டிரம்ப் ஆதரவாளர்கள் கம்பு, கற்களுடன் நாடாளுமன்றத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வழக்கு கொலராடோ உயர் நீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில், 4-3 என்ற வீதத்தில் பெரும்பான்மை நீதிபதிகள், டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகும் தகுதியை இழந்து விட்டதாக கூறி உள்ளனர். அமெரிக்க அரசியலமைப்பின் 14வது சட்ட திருத்தம் 13வது பிரிவின்படி, நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியவர் மீண்டும் அதிபராக தகுதியற்றவர் ஆவார். இந்த சட்டப்பிரிவு எப்போதும் பயன்படுத்தப்பட்டதில்லை. முதல் முறையாக இப்பிரிவின் கீழ் டிரம்ப் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கொலராடோ நீதிமன்ற தீர்ப்பு டிரம்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் இதில் மேல்முறையீடு செய்யும் வகையில், 2024 ஜனவரி 4ம் தேதி வரை இந்த உத்தரவு அமலுக்கு வராது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்றத்தில் வன்முறை தூண்டிய விவகாரம்; அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட தடை: தகுதி நீக்கம் செய்து நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Parliament ,Trump ,US presidential election ,Washington ,Donald Trump ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்